இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன.
மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிந்திய தகவல்களின் அடிப்படையில் 180 ஆக அதிகரித்துள்ளது. 110 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். மேலும் 109 பேர் காயமுற்றுள்ளனர் .
இதே வேளை வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் நீர் மட்டம் குறைந்திருந்தாலும். இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்களை இருப்பிடங்களுக்கு மீள திரும்ப வேண்டாம் என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் பொது மக்களை கேட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்கிழமையும் மீண்டும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டு இந்த வேண்டுகோளை அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் விடுத்துள்ளது.
இருப்பிடங்களுக்கு திரும்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை தற்போது தங்கியுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கியிருக்குமாறு அரசு பேரிடர் முகமைத்துவ மையம் பொது மக்களை கேட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வயிற்றோட்டம் , வாந்திபேதி மற்றும் தோல் சார்ந்த நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.