மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது.
முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பெருமளவு மக்களால், மாட்டுக்கறி உண்ணப்படுகிறது. விலை மலிவு என்பதோடு, அதிக சத்தானபொருள் என்பதால், இதனை அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் உண்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாடுகளை இறைச்சிக்காக விற்கவும், கொல்லவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக, கேரளாவில் இந்த தடை உத்தரவை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும், இதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, கேரளாவின் பல்வேறு இடங்களிலும் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டங்களை, எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பினர் நடத்திவருகின்றனர். நேற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய ஏராளமான மாணவர்கள், மாட்டுக்கறி சமைத்து, உண்டு, ஆரவாரம் செய்தனர்.
இதேபோன்ற போராட்டங்கள், கேரளாவில் மற்ற கல்வி நிறுவனங்களிலும் நடைபெற்றன. மக்களின் உணவில் கை வைக்கும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது என்று, அப்போது மாணவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.