இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள டிரால் நகரில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதலின் போது புர்ஹான் வானியின் நெருங்கிய கூட்டாளியும், தீவிரவாத குழுவின் மூத்த தளபதியுமான சப்ஸார் பட் உள்பட 8 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமை அதிகாலை தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் காவல் வளையத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
”முதற்கட்ட சண்டையில் சப்ஸார் உள்பட குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
சப்ஸார், ஃபெய்ஸான் மற்றும் அடில் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சப்ஸார் கொல்லப்பட்ட செய்தி காஷ்மீர் முழுக்க வேகமாக பரவி நிலையில் அங்கு தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது.
சப்ஸாரின் கொலை செய்தி இமயமலை பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களளில் தன்னிச்சையான பணிநிறுத்தத்தை தூண்டிவிட்டுள்ளது.
போராட்டம் பரவும் பட்சத்தில் இணையதளம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் முடக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சப்ஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு அருகே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம் ஏற்கனவே கூடியுள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன.