அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கிறிஸ்துவர்கள் மீதான கொலை தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எகிப்தில் மின்யா மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டது இரக்கமற்ற தாக்குதல். ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களுக்கு எதிரான கொலைகள் முடிவுக்கு வர வேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும். எகிப்து மக்களுக்கு அமெரிக்கர்கள் துணை நிற்பார்கள், நமது எதிரிகளை தோற்கடிப்போம்” என்றார்.