பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதற்காக, 1960–ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள், 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்காவிட்டாலும்கூட, சந்தையில் இவற்றை இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதித்திருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில் இறைச்சிக்கான கால்நடைகள் தற்போது 90 சதவீத அளவுக்கு கால்நடை சந்தைகளில்தான் விற்கப்படுகின்றன; வாங்கப்படுகின்றன. நமது நாட்டின் இறைச்சி சந்தை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலானது. இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஒட்டுமொத்த கால்நடை வணிகமும், சந்தையும் பாதிப்புக்கு உள்ளாகும். கசாப்பு கடைக்காரர்கள் இனி பண்ணைக்கு சென்றுதான் இறைச்சிக்கான கால்நடைகளை வாங்க முடியும்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பதிவில், மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவு நாகரீகமற்ற முடிவு. இந்த முடிவு இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிக்கும் நடவடிக்கை. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டால், நாளை மீன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்கள். மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் இந்த முடிவு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் கொள்கைகளை நடைமுறைப்படுவதாக உள்ளது என்றும் பினராயி குற்றம் சாட்டியுள்ளார். மாடுகளை கொல்பவர்களை சங்பரிவார் அமைப்புகள் தாக்குதல் நடத்துவம், மத்திய அரசின் இந்த தடையும் ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது :
கால்நடைகளை வைத்து அரசியல் நடத்துவதன் மூலம் மக்களிடம் பிளவை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கும் பாஜக, இந்திய நாடு முழுவதும் கால்நடை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக விவசாயிகளை பாதிக்கும். மத்திய அரசின் இந்த சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது.
இந்திய விவசாயிகளுக்கு மிகக்கடுமையான நஷ்டத்தையும், சமூக பதட்டத்தையும் , பொருளாதார இழப்புகளையும் உருவாக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.