தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அவ்வாறு நடப்பதாக இருந்தால், நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கி, மக்களிடையே பீதியைக் கிளப்புவதுதான் அமைச்சரின் வேலையா என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆவின் பால் நிறுவனம் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களைப்பற்றி குறை கூறினார்.
தலைநகர் சென்னையில் மட்டும் 50 சதத்துக்கும் மேற்பட்ட பால் தேவையை, தனியார் நிறுவனங்கள் நிறைவேற்றி வரும் நிலையில், தனியார் பாலில் ரசாயனம் கலப்பதால், அவை நோயை உண்டாக்கும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பல உண்மைகள் தெரியவந்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்கள் தங்களைச் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்திருந்தார்.
ஆனால், அமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புற்று நோய் ஏற்படுத்தும் பொருட்கள் பாலில் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்தர் பாலாஜியே, வழிப்போக்கன் போல போகிற போக்கில் பேசி, பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பான பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காலத்திலிருந்தே, அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாங்கள் கோரி வருவது அரசின் கவனத்துக்கு வராமல் போனது ஏன் என பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.