நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில் தேர்வு நடந்தது.
சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த
இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் ஜூன் 7 ம் தேதி தங்கள் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
சீரான கேள்வித்தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், ஆங்கில மற்றும் தமிழ் கேள்வித் தாள்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறினர்.
மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஒரே சீரான கேள்வித் தாள்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எல்லா இடங்களிலும் ஒரே சீரான முறையில் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் தேர்வு எழுதியவர்களுக்கு எளிதான வினாத்தாளும் ஆங்கில மொழியில் எழுதியவர்களுக்கு கடினமான வினாத்தாளும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “நீட் தேர்வில் இந்தியா முழுவதும் ஒரே வினாத்தாளே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் நுண்ணறிவு, இயல்திறன் ஆகியவற்றின் அளவீடுகள் பெருமளவில் வேறுபடும். ஆகவே தற்போதைய நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக நாடுமுழுவதும் ஒரே கேள்வித்தாளைக் கொண்டு புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.