அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்று கூறிய விக்ரமசிங்க, இனவாத செயல்கள் காரணமாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகள் பின்னடைவு காணும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.
சட்டத்தை மீறும் மற்றும் இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போலீசாரின் முக்கிய கடமையென்று கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போலீசார் தனது கடமைகளை பாரபட்சமின்றி நிறைவேற்ற முன்வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.