பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள அதிகாரிகள், புதன்கிழமை மேலும் மூன்று பேரை கைது செய்தனர். திங்கள் அன்று, அரியானா கிராண்டே கச்சேரியில் நடந்த தற்கொலை குண்டுவீச்சிற்கு பின்னர், பல சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் இனிவரும் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தும் வகையில் செயல் படுகின்றன.
குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சல்மான் அபேடி ஒரு லிபிய குடும்பத்தில் பிரிட்டனில் பிறந்தவர்; மான்செஸ்டர் தெற்கு புறநகர் பகுதியில் வளர்ந்தார். மேலும் உள்ளூர் சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். போலிஸ் அவரது வீட்டை சோதனை செய்தனர். அண்டை வீட்டுக்காரர்கள் அவரை ஒரு உயரமான, மெல்லிய இளைஞனாக நினைவு கூர்ந்தனர். அவர் பெரும்பாலும் பாரம்பரிய இஸ்லாமிய உடை அணிந்திருந்ததாகவும், அதிகம் பேசமாட்டார் எனவும் தெரிவித்தனர்.
சல்மான் அபேடி தனியாக செயல்பட்டார் என்பது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர். அபேடியைப்பற்றி பாதுகாப்புப் படைகளுக்கு ஓரளவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்த்து என்று உள்துறை செயலாளர் அம்பர் ரூட் கூறினார்.
பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் ஏற்கனவே பிரதமர் தெரீஸா மே கூறியிருந்தார்.
பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு துணையாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.