ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் அதற்குண்டான உத்தரவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிறப்பிக்க கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, காவிரி படுகை பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 14,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளித்து அதனை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் கூறினார்.

மேலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டிவரும் கேரள அரசின் நடவடிக்கை தடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய சுமார் 17,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த முதல்வர், இலங்கையில் அரசு வசமிடமுள்ள 135 படகுகளையும், சிறையில் அடைபட்டுள்ள 13 மீனவர்களையும் விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top