பல்வேறு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கும் போப் பிரான்சிசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில் இன்று முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட டிரம்ப், முதல் பயணமாக சவூதி அரேபியா சென்றார். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் தற்போது ஐரோப்பிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
போப் பிரான்சிஸும் டிரம்பும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள் தடையற்ற முதலாளித்துவம் ஆகிய விவகரங்களில் டிரம்ப்- போப் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதேபோல், மரண தண்டனை, ஆயுத வியாபாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது.
போப் பிரான்ஸிஸுடான சந்திப்பின் போது அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரும் உடன் இருந்தனர். போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் இத்தாலி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் நுற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிரம்ப்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.