இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத சாமியார் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண்.
பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை செய்ய அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துயரங்களிலிருந்து தன்னுடைய பூஜையின் மூலம் இந்த புனித மனிதர் தங்களை காப்பாற்றுவார் என்று அப்பெண்ணின் தாயார் நம்பியிருந்தார்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த தீர்த்தபடா முயற்சித்த போது அப்பெண் கத்தி ஒன்றை எடுத்து தாக்கியுள்ளார். அதன்பின், போலீஸாருக்கும் அவரே தகவல் கொடுத்துவிட்டார்.
பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்ததாக கூறப்படும் நபர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.