சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கம் வென்ற விருதுநகர் மாணவி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மீன்ராஜ் என்பவரது மகள் சுபஸ்ரீ. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்பு செல்லும் சுபஸ்ரீ, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதையறிந்த இவரது பெற்றோர் சாத்தூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இவரை சேர்த்து பயிற்சி அளித்தனர்.

அங்கு 2 ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ, பின்னர் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பயின்றபோது 4 ஆண்டுகள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் சுபஸ்ரீ மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மலேசியாவின் மாலாகாவில் நடை பெற்ற சர்வதேச அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 10-12 வயது பிரிவில் பங்கேற்று அவர் விளையாடினார். இதில் 500 மீட்டர் தூரத்தை 56 நொடிகளிலும், ஆயிரம் மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களிலும் கடந்து இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top