அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜம்தான் என்ற இமாச்சல பிரதேச முதல்வர் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் வீரபத்ர சிங் பேசுகையில், அதிக மக்கள் தொகை இருக்கும் மாநிலத்தில் மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜமான ஒன்றுதான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மாநிலத்தின் எதிர்கட்சியான பாஜ, முதல்வரின் இந்த பேச்சை கண்டித்துள்ளது.
இதுகுறித்து பாஜ எம்பி அனுராக் தாகூர் கூறுகையில், முதல்வர் வீரபத்ரசிங்கின் இந்த பேச்சு முதிர்ச்சியற்றதும், மனிதாபிமானமில்லாததுமான பேச்சாகும். இதன் மூலம் முதல்வர் தன்னை உணர்ச்சியற்றவர் என்று காட்டிக் கொண்டது மட்டுமல்ல, அவர் பேச்சு எத்தனை நகைப்புக்குரியது என்பதையும் உலகின் முன்னால் காட்டி விட்டார். மக்கள் பன்றி காய்ச்சலால் சாவது சகஜம் தான் என்று பேசியதன் மூலம் அவர் முதல்வர் பதவி வகிக்க தார்மிக தகுதியை இழந்தவராகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.அண்மையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் முறைகேடு காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் முதல்வரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.