முள்ளிவாய்க்கால்: கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதி

மீளாய்வு விண்ணப்பத்தையடுத்து, முள்ளிவாய்க்கால் கிறிஸ்தவ ஆலயத்தின் உள்ளே நினைவேந்தல் நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் தேவாலய வளவில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்துவதுடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக காவல்துறையினரால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையுத்தரவு தொடர்பில் வடக்கு கிழக்கு பிரதேச சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர் எழில்ராஜன் சார்பில் வியாழனன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனு ஒன்றைப் பரிசீலனை செய்த நீதிபதி, அந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்குள் எவரும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது.

மேலும் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக அந்த ஆலயத்தின் உள்ளே பூஜை செய்யவும், அந்த ஆலய வளவின் ஏனைய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்துபவர்கள் கூடியிருந்து செயற்படலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் பூஜையும், வழிபாடுகளும் இடம்பெற்றன.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களில் ஒரு பகுதியினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் அடுக்கப்பட்டு, மலர்மாலைகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top