ரஜினிகாந்த் கடந்த மே 15ஆம் தேதி முதல் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். முதல் நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார் ரஜினி. அதற்குப் பிறகு, இன்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் பேசினார் ரஜினிகாந்த்.
கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் தான், பச்சைத் தமிழன்தான் என்றும் தமக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த எதிர்ப்புகளின் மூலம் உதவிக்கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
“முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில், அரசியலுக்கு வருவது குறித்து நான் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகின. எதிர்ப்புகள் இருக்க வேண்டியதுதான். சமூக வலைதளங்களிலும் இது குறித்து கடுமையாகப் பேசினார்கள். அதில் எழுதியிருந்த வாசகங்களைப் பார்த்து நான் வருத்தப்படவில்லை. ஆனால், நம் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள் என்று தோன்றியது” என்று குறிப்பிட்டார் ரஜினி.
மேலும், “ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுதான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். கர்நாடகத்திலிருந்து, மராட்டியத்திலிருந்து வந்திருந்தாலும் நீங்கள்தான், பெயரும் புகழும் கொடுத்து அன்பைக் கொடுத்து நீங்கள் என்னைத் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சைத் தமிழன். என்னுடைய மூதாதையர்கள், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள்” என்று தெரிவித்த ரஜினி, “என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் இமயமலையில்தான் போய்விழுவேன். ஏனென்றால் நல்ல மக்கள் உள்ள தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது சித்தர்கள் வாழும் இமயமலையில் இருக்க வேண்டும்” என்றார்.