எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.
பிளஸ் 2 தேர்வைப் போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டமே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 பேர் பெற்றனர். 451-ல் இருந்து 480 வரைக்கும் 1,22,77 பேர் பெற்றுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.
தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார்.
இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் மாணவர்களைவிட 3.7% அதிகம்.