தமிழக அரசுக்கும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாட்டை உருவாக்க வேண்டும், ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர்.
தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்திற்கான பேருந்துகளை பெரும்பாலும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களே இயக்கிவருவதால், இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இயல் புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய பாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய தொகையில் முதற்கட்டமாக 1,250 கோடியை விடுவிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயும் பிறகு 250 கோடி ரூபாயும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் வேலை நிறுத்ததில் இருந்த நாட்கள் விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்றும் அரசு உறுதியளித்திருப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 24ஆம் தேதி துவங்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைக்கவும் அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக தொழிலாளர் முற்போக்கு சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் தெரிவித்தார்.
இதையடுத்து, நாளை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.