தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா அல்லது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கா என்ற சர்ச்சை எழுந்தது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தச் சின்னம், முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனும், இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். முதலில் சுகேஷ் சந்திரசேகரும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனும் கைது செய்யப்பட்டனர். மேலும், தினகரன் கொடுத்தாகக் கூறப்படும் 10 கோடி ரூபாய் முன்பணத்தில் 1.30 கோடியை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கடந்த மாதம் 25-ஆம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.