உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும்.
இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வான்னாகிரை வைரஸால் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இதற்கு முன்னர் நடைபெறாதது ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை அமைப்பான யூரோபோல் தெரிவித்திருக்கிறது.
எனது கணினி பாதிக்கப்பட்டுள்ளதா?
வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது.
விண்டோஸ் இயங்குத்தளம் வழங்குகின்ற மென்பொருட்களின் மேம்பாடுகளை பயன்படுத்தாமலோ, மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கின்றபோது கவனமாக இல்லாமலோ இருந்தால் நீங்களும் பாதிப்படையும் ஆபத்து நிலவுகிறது.
இருப்பினும், இந்த இணைய தாக்குதலை பொறுத்த வரை வீட்டில் கணினி பயன்படுத்துவோர் மிக குறைவான ஆபத்தையே சந்திப்பதாக நம்பப்படுகிறது.
மென்பொருட்களின் மேம்பாட்டு மென்பொருட்களை, ஃபயர்வயர்கள் மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை தரவிறக்கி கணினியில் செயல்பட வையுங்கள். மின்னஞ்சல் செய்திகளை வாசிக்கின்றபோது கவனமாக இருங்கள்.
உங்களுடைய கோப்புக்களின் இன்னொரு பதிப்பை எடுத்து வைத்துகொள்ளுங்கள். அப்படியானால், உங்களுடைய கோப்புகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், மீட்புத்தொகை செலுத்தாமலேயே உங்களுடைய கோப்புக்களை திறந்துவிட முடியும்.
மீட்புத்தொகை செலுத்தினாலும் உங்களுடைய கோப்புக்களை திறக்க முடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், இன்னொரு பதிப்பை வைத்திருப்பது நல்லது.
ரான்சம்வேரின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கும், அது நடக்க முடியாமல் போனால் செய்ய வேண்டியது என்ன? என்பதற்கான ஆலோசனைககள் (எம்எஸ்17-010) ஐக்கிய ராஜ்ஜியத்தின் இணைய பாதுகாப்பு இணையதளத்தில் உள்ளன.