வட கொரியா தனது மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகிலிருந்து பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வட மேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், 700 கிலோ மீட்டர் தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தென் கொரியா கூறியுள்ளது.
வட கொரியா தொடர்ச்சியான பல ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச கண்டனங்கள் மற்றும் அமெரிக்கவுடனான உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களிலே அதன் ராக்கெட்கள் வெடித்து சிதறியதால் சோதனைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த சமீபத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே-இன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தனது பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.