ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தை கட்டுப்படுத்த இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணினியில் பயன்பாட்டாளர்களின் தரவுகளை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இந்த வைரஸ் ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட 100 நாடுகளுக்கு பரவியது.
கணினிகளை கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், தகவல்களை கட்டுப்படுத்தும் இந்த வைரஸ், கணினியில் உள்ள தரவுகளை மீண்டும் பயன்படுத்த சுமார் 300டாலர்கள் வரை மெய்நிகர் பணமான பிட்காயின் பணத்தை செலுத்துமாறு கணினி பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று கணக்குகளை பிபிசி ஆராய்ந்த போது, அவை ஏற்கனவே கணினியை ஊடுருவியவர்களுக்கு சுமார் 22,080 பவுண்டிற்கு ஈடான தொகையை கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.
பெயர் வெளியிடாமல் ரகசியமாக செயல்படும் மால்வேர் டெக் எனப்படும் தீய மென்பொருள் வல்லுநர் ஒருவர், வைரஸின் பரவலை அறிய இணைய தளத்தை பதிவு செய்தததை தொடர்ந்து வைரஸ் பரவல் முடிவுக்கு வந்தது.
அந்த வல்லுநரை ‘ ஆபத்து கால நாயகன்’ என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.
22 வயது நிரம்பிய வல்லுநர் பிபிசியிடம் பேசுகையில்,”தற்போது பொதுமக்கள் தங்களுடைய கணினிகளில் பேட்ச் எனப்படும் அப்டேட் மென்பொருளை உடனடியாக நிறுவ வேண்டும்.
”நாங்கள் இதை ஒருமுறை நிறுத்திவிட்டோம், ஆனால் மீண்டும் மற்றொன்று விரைவில் வரும். அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.
”இதில் நிறைய பணம் புழங்குகிறது. இதை நிறுத்துவதற்கு அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. வைரஸின் கோட்டை மாற்றி மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க பெரிய முயற்சிகள் தேவைப்படாது” என்றார்.