பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9 லட்சம் பேரில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்றவர்கள் விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மாணவ-மாணவிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள் அதிகாரப் பூர்வமாக வெளியான அடுத்த சில நொடிகளில், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் அவர்கள் ஏற்கெனவே அளித்திருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதுபோன்று எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவு களை தெரிவிப்பது இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.