மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூட்டியுள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த முறைகேடுகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டின.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜவுக்கே வாக்குகள் விழும் வகையில் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இந்நிலையில், தற்போது தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி செயல் விளக்கம் மூலம் 2 தினங்களுக்கு முன்பு நிருபித்துக் காண்பித்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் உள்ள நவீன மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அவ்வாறு முறைகேடு செய்ய இயலாது. பாதுகாப்பு நிறைந்தது என்று தேர்தல் ஆணையம் மறுத்தது.

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கவும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று கூட்டியுள்ளது. இதில், வாக்காளர்களுக்கு பணம் தரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது, அவர்களை கைது செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள 7 தேசிய கட்சிகள் மற்றும் 49 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top