ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலையில் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான முழு வீச்சில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக இந்த தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன.
இதுதொடர்பாக பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியை, சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருக்கும் சோனியா, வீடு திரும்பியதும் அவருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்க்கட்சிகளின் சார்பில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு தலைவரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று அதன் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால் காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சரத்பவார் இயற்கையாகவே எதிர்க்கட்சிகளின் தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தலித் பிரிவை சேர்ந்த மீரா குமார் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்தவர் என்பது அவருக்கு சாதகமாக இருக்கும். இதைப்போல சரத் யாதவும் மிகச்சிறந்த பாராளுமன்ற அனுபவம் கொண்டவர். சிறந்த கல்வியாளரான கோபால காந்தி அனைத்து கட்சிகளின் அபிமானத்தையும் பெற்றவர் ஆவார்.