தன்னுடைய முகநூல் தோழி மீது காரை ஏற்றிக் கொலை செய்த தீயணைப்பு வீரர் இளையராஜா, சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
வேறொரு நபருடன் நட்பு ஏற்பட்டதால், முகநூல் தோழியும் அரசுப் பள்ளி ஆசிரியருமான நிவேதா மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
என்ன நடந்தது?
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நிவேதா கருத்து வேறுபாட்டால் 20 வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்துள்ளார். இந்நிலையில், நிவேதாவுக்கும் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான இளையராஜா(28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான கணபதி (33) என்பவருடனும் நிவேதாவுக்கு முகநூலில் கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு அண்ணா நகரில் கணபதியும், நிவேதாவும் ஒரே பைக்கில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளையராஜா, காரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிவேதா கொலை செய்யப்பட, காயமடைந்த கணபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணா நகர் போலீஸார், இளையராஜாவை கைது செய்தனர். இளையராஜா அளித்த வாக்குமூலத்தில், ”நிவேதாவுக்கும் எனக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டது. அவரது வயது முதிர்ந்த தாயார் கோவை சிங்காநல்லூர் குடியிருப்பில் வசித்தார். நான் அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது தாயாரை பார்க்க வரும் நிவேதாவுக்கும், எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
இந்நிலையில் நிவேதாவின் முகநூல் நண்பர் கணபதி, தானும் மனைவியை பிரிந்தவர் என்று சொல்லி நிவேதாவை திருமணம் செய்வதாக கூறி பணம் பெற்று வந்தார். ஆனால் அவர் தனது முகவரியை தெரிவிக்க மறுத்து வந்தார். ஏற்கெனவே நானும் நிவேதாவும் சென்னை வந்து கணபதியின் முகவரியை 3 நாட்களாக தேடினோம். ஆனால் அவர் எங்களை அலைக்கழித்தார்.
அதன் பிறகு மீண்டும் சென்னை வந்தோம். கணபதியை அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே வரச்சொல்லி பேசினோம். அப்போது தனது வீட்டு முகவரியை காட்ட சம்மதித்தார். ஆனால் என்னை வரக்கூடாது என்று இருவரும் சொல்லி விட்டனர். நிவேதாவின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது.
கூடவே இருந்த என்னை உதறி விட்டு கணபதியுடன் நெருக்கம் காட்டி சென்றதை என் மனம் ஏற்கவில்லை. எனவே இருவரையும் தீர்த்துக் கட்ட கார் மூலம் மோதினேன்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இளையராஜா சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.