பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அதன் தாக்கம் மெதுவாகக் குறைவதாகத் தெரிகிறது. இந்நடவடிக்கையின் முழு பாதிப்புகளும் இன்னும் அறியப்படாத நிலையில், ஆர்.பி.ஐ. யும் பிரதமர் அலுவலகமும் தகவல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன.
இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையிலான ஒரு மனு கோரியிருந்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறி ஆர்டிஐ மனுதாரருக்கு தகவல் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ஆர்பிஐ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கத் தூண்டிய விவரங்களை வெளியிடுவது நாட்டின் எதிர்கால கொள்கை, உள்ளிட்ட பொருளாதார நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் முடக்கம் சென்ற ஆண்டு நவம்பரில் துவங்கப்பட்டபின் ரியல் எஸ்டேட், கார் உள்ளிட்ட பல பெரிய தொழில்கள் முதல் இரு மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது இவை மீண்டும் பழைய நிலைக்கு மெதுவாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் சிறுதொழில்கள் இன்னும் நசிந்த நிலையிலே உள்ளன. பெரும்பான்மையான சிறுதொழில்கள் வங்கியில் வாங்கிய கடன்களை அடைக்கமுடியாமல் இன்னும் இருக்கின்றன.