நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ”இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்கமொழி உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன. நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இது பாரபட்சப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழியில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆங்கில மொழி கேள்வித்தாளைவிட தமிழ் மொழியில் அமைந்த கேள்வித்தாள் எளிமையாக இருந்தாக கூறப்படுகிறது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
மீண்டும் நாடுமுழுவதும் ஒரே மாதிரி கேள்வித்தாளை தயாரித்து அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.