கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக, கண்காணிப்பாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிட்டது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, “மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார். அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது. இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்” என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.