தமிழக அரசு கடுமையான நெருக்கடியில் இருக்கும் நிலையில், திருப்பதியில் முதல்வர் எடப்பாடி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் சென்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுகவில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. கட்சி இரண்டாக உடைந்தது; கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தது; சசிகலா சிறைவாசம்; அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது; இரட்டை இலை முடக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு சிறைவாசம் என அதிமுக அம்மா அணி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், அதிமுக இரு அணிகளின் இணைப்பு இழுபறி நிலையில் இருந்து இல்லாமலே போய்விட்டது. புதிய டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு என தமிழக அரசு மீதான அதிருப்தி மக்களுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், மத்திய அரசும், பாஜவும் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு வந்தார். அவருடன் மனைவி ராதா, மகன் மிதுன் ஆகியோரும் வந்தனர்.இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கோயிலில் நடந்த வாராந்திர சேவையான அஷ்டதள பத்மாராதனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்உண்டியலில் காணிக்கை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்தும், பேடி ஆஞ்சநேயர் கோயிலிலும் தரிசனம் செய்தனர். பின்னர் வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘தனிப்பட்ட முறையில் நான் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தேன். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு சென்றார்.