கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளவர், தமிழ்நாட்டின் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதனை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு நேரில் ஆஜராக அனுப்பிய சம்மனை கர்ணன் ஏற்காத நிலையில், நீதிமன்ற பணிகள் எதனையும் கர்ணன் செய்ய கூடாது என கடந்த பிப்ரவரி 8ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின் கடந்த மார்ச் 31ந்தேதி நேரில் ஆஜரான கர்ணன் தனக்கு நீதிபதி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அரசியல் சட்ட அமர்வு முன் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தன் முன்பு ஆஜராக வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து நீதிபதி கர்ணன் மனநிலை பற்றி பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.