கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறைகளையே பின்பற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளனர்.