கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். மேலும், சயான் பாலக்காடு அருகே விபத்தில் காயமடைந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இறந்து விட்டனர்.
இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சாமியாரான மனோஜ் மற்றும் அவன் கூட்டாளிகளான சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ் மற்றும் ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள குட்டி என்கிற பிஜினை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.