இதற்கு முன்பு எப்போதுமில்லாத நெருக்கடிக்கு மத்தியில் இந்திய நீதித்துறை தற்போது உள்ளது.
கடந்த பல மாதங்களாக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை சேர்ந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணனுக்கும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உண்டாகியுள்ளது.
திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு அரசாங்க மருத்துவர்களைக் கொண்டு மனநலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டதும் இப்பிரச்சனை மேலும் தீவிரமானது.
இதனால் கோபமுற்ற நீதிபதி கர்ணன், இதே போன்ற மனநலப் பரிசோதனைகளை மேற்கண்ட 7 நீதிபதிகளுக்கும் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இப்பிரச்சனை எவ்வாறு ஆரம்பித்தது, தற்போது எந்த நிலையில் உள்ளது, இனி என்னவாகும் என்பது குறித்து பிபிசியின் இக்கட்டுரை அலசுகிறது.
ஆத்திரமூட்டலின் ஆரம்பம்
தற்போதைய மோதல் போக்கு, முதலில் ஆரம்பித்தது கடந்த ஜனவரி 23-இல்தான். ஊழல் செய்ததாக 20 நீதிபதிகள் மற்றும் 3 மூத்த சட்டத்துறை அதிகாரிகளின் பெயர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதத்தில் நீதிபதி கர்ணன் அனுப்பியது பிரச்சனையை துவக்கியது.
தான் அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் எதனையும் அளிக்கத் தவறினாலும், அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோதியை நீதிபதி கர்ணன் கேட்டுக் கொண்டார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, நீதிபதி எழுதிய இக்கடிதத்தையும், கடந்த காலத்தில் தனது சக நீதிபதிகள் மீது ஊழல் மற்றும் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி நீதிபதி கர்ணன் எழுதிய இது போன்ற கடிதங்களையும், நீதிமன்ற அவமதிப்புக்கு உகந்ததாக முடிவெடுத்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இது குறித்து அவரிடம் விளக்கம் கோரியது.
இது தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வேண்டிய நீதிபதி கர்ணன் அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், கர்ணனுக்கு ஒரு வாய்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், அவர் மார்ச் 10-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவையும் நீதிபதி கர்ணன் புறக்கணித்ததால், அவர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், மார்ச் 31-ஆம் தேதியன்று மேற்கு வங்க மாநில போலீஸ் தலைமை அதிகாரி, நீதிபதி கர்ணனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதுகுறித்து மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை அவர் நீதிமன்ற அல்லது நிர்வாக ரீதியான பணிகள் எதையும் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கும் போராளி குணம் கொண்ட நீதிபதி கர்ணன் மசியவில்லை.
அதே நாளில், நீதிபதி கர்ணனும் ஓர் உத்தரவு பிறப்பித்தார்.
தலித் (முன்பு தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட ) சமூகத்தை சேர்ந்த தன் மீது ஏழு நீதிபதிகளும் சாதி பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டிய நீதிபதி கர்ணன், தன்னை பாகுபாடு செய்ததற்கு 7 நீதிபதிகளின் மீதும் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், மேற்கூறிய நீதிபதிகள் தனக்கு 140 மில்லியன் ரூபாய் பணம் நஷ்டஈடு வழங்கவும் கர்ணன் உத்தரவிட்டார்.
சில நாட்களுக்கு தன் மீதான கைது வாரண்ட் வழங்கப்பட்ட போது, அதனை ஏற்க மறுத்து, அந்த உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் வேறு 6 நீதிபதிகள் நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்து உத்தரவிட்டு நாட்டை அதிர வைத்தார் நீதிபதி கர்ணன்.
உயர் நீதிமன்றத்தில் இருந்து தடை விதிக்கப்பட்ட பின்னர், தனது வீட்டில் தற்காலிக நீதிமன்றம் ஒன்றை அமைத்து டெல்லி வான் கட்டுப்பட்டு ஆணையத்துக்கு, மேற்கூறிய ஏழு நீதிபதிகளும் வெளிநாடு செல்வதை தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தன்னை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட அதே மே மாதம் 1-ஆம் தேதியில், (திங்கள்கிழமை) நீதிபதிகள் தனது வீட்டில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
நல்லறிவு நிலை குறித்த கேள்விகள்
அதே நாளில், மே 4-ஆம் தேதியன்று நீதிபதி கர்ணனின் மன சமநிலை தடுமாறுகிறதா என்று மருத்துவர் குழு ஆராய வேண்டும் என மருத்துவர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 8-ஆம்தேதியன்று இக்குழு தனது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அண்மைக் காலமாக செய்தியாளர்கள் சந்திப்பில் நீதிபதி கர்ணன் தெரிவித்து வரும் கருத்துக்களையும், அவர் பிறப்பித்த உத்தரவுகளையும், அவரால் நீதிமன்றத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது மற்றும் பணியாற்ற முடியாது என்றறிந்து தங்களின் சார்பாக பரிவுடன் செயல்பட்டதாக தாங்கள் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தாலும், அதனால் நீதிபதி கர்ணன் சமதானமடையவில்லை.
தான் நல்ல உடல்நலன் மற்றும் மனநலனுடன் இருப்பதாக தெரிவித்த நீதிபதி கர்ணன், தனது உடல்நலன் மற்றும் மனநலன் குறித்து தனது மனைவியும், இரு மகன்களும் திருப்தியுடன் இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவு தலித் நீதிபதிக்கு எதிரான அவமானம் என்றும், தான் மருத்துவ பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே, டெல்லி போலீஸ்துறையின் பொது இயக்குநருக்கு ஏழு நீதிபதிகளையும் மனநல குழுவுக்கு முன்னர் ஆஜராக செய்து, அவர்கள் மனநல பாதிப்பு அடைந்துள்ளனரா என்று ஆராய்ந்து மே 7-ஆம் தேதியன்று மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி கர்ணன் ஆணையிட்டார்.
`தவறு செய்துவிட்டு தலித் என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தலாமா?’
நீதிபதி கர்ணன் யார்?
சிறிதும் இடைநிறுத்தம் ஒரு போராளிதான் நீதிபதி கர்ணன்.
கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த 7 ஆண்டுகளில் , தனது சாதியை காரணமாக கொண்டு இரண்டு தலைமை நீதிபதிகள் தன்மீது பாரபட்சம் காட்டியதாக குற்றம்சாட்டினார்.
ஒரு பயிற்சி நீதிபதியை, தனது சக நீதிபதி பாலியல் வல்லுறவு செய்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
மேலும், சில சந்தர்ப்பங்களில், மற்ற நீதிபதிகளின் நீதிமன்ற அவைக்குள் அவர் முரட்டுத்தனமாய் நுழைந்ததாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-ஆம் ஆண்டின் இறுதியில், அவரின் சக நீதிபதிகள் பலர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவில் நீதிபதி கர்ணனுடன் தங்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று குற்றம்சாட்டி அவரை வேறிடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஒரு வருடத்துக்கு முன்னர், உச்ச நீதிமன்றம் கர்ணனை கொல்கத்தாவுக்கு மாற்றிய பிறகு, அவர் தனது பணி மாற்றத்துக்கு எதிராக தடை விதித்தார்.
இனி என்ன நடக்கும்?
இந்தியாவில் முதல் முறையாக, பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதால், இனி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
மனநல சோதனையை நீதிபதி கர்ணன் மேற்கொள்ள வேண்டிய மே 4-ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாகும். ஆனால், அவரது விருப்பத்துக்கு எதிராக அவரை மருத்துவ சோதனைக்கு காட்டாயப்படுத்துவது சாத்தியம் இல்லை.
தனது 62-ஆவது வயதில் நீதிபதி கர்ணன் ஓய்வு பெறும் நாளான ஜூன் 12-ஆம் தேதியன்று வரை இந்த வழக்கு நீடிக்கலாம் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்ற பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்பதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு சிறந்த நிலையாக இருக்கக்கூடும்.