சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு

(தினத்தந்தி)

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறுஆய்வு மனு

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.

அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரங்கள்

இது சம்பந்தமாக ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகள் குறித்த விவரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top