வடகொரிய ஏவுகணைகளை அழிக்க இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் `தாட்” தடுப்பு முறை

(பி.பி.சி. தமிழ்)

தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.

சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக பதிலளித்தது. மேலும், அமெரிக்கா ஓர் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் னை சரியான தருணத்தில் சந்தித்தால் பெருமைப்படுவேன் என்று கூறிய அடுத்த நாள் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா தாட் ஏவுகணை அமைப்பை நிறுவப் போவதாக அறிவித்தது . ஆனால் இது 2017ம் ஆண்டு இறுதியில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்கவைக்கலாம் என்றும் பல உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

தனது ராணுவ செயல்பாடுகளில் அந்த அமைப்பு தலையிடுகிறது என்று சீனா நம்புகிறது. அதனால் இந்த அமைப்பை சீனாவும் கடுமையாக எதிர்க்கின்றது. செவ்வாயன்று, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரியது.

”நமது நலன்களை பாதுகாக்கத் தேவையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கிம் ஜோங்- உன்னை சந்திப்பது தொடர்பாக டிரம்ப் விருப்பம் வெளியிட்டிருப்பதை வரவேற்ற அவர், அதேவேளை, ”பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள்தான் அணுவாயுதமயமாக்கலை தடுக்கும் உண்மையான மற்றும் சாத்தியமான வழி ” என்று கூறியுள்ளார்.

தாட் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானதும், வட கொரியா ”பொருத்தமான பதிலடி”தரப்போவதாகவும், அரசு ஊடகத்தில், ”இரக்கமற்ற பதில் தாக்குதல் நடத்துவதுதான் எங்களது ராணுவத்தின் தீர்க்கமான விருப்பம்,” என்று தெரிவித்தது.

தாட் ஏவுகணை தற்போது கொரியாவைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்று அங்குள்ள அமெரிக்கப் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால் தாட் ஏவுகணை அமைப்பு “தொடக்க இடைமறிப்பு திறன்” கொண்டதாக மட்டுமே உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஏ எப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஏவுகணையின் பெரும்பாலான பகுதிகள் வந்து சேருவதால் அது பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சமீப வாரங்களில், ஐநா வின் ஏவுகணை சோதனை மீதான தடையை தொடர்ந்து மீறிவரும் நேரத்தில், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.

சமீப வாரங்களில் தோல்வியில் முடிந்த இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை நடத்தியுள்ளது. மேலும் எந்த நேரத்திலும் தனது ஆறாவது அணு சோதனை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, சூப்பர்சானிக் பிஒன்பி என்ற லேன்சர் குண்டு வீச்சுத்திறன் கொண்ட விமானங்களைப் பயன்படுத்தி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதை வடகொரியா கோபமாக கண்டித்துள்ளது. இது, அணுகுண்டுகளை வீசுவதற்கான ஒத்திகை நடவடிக்கை என்று வர்ணித்துள்ளது.

”கொரிய தீபகற்பத்தை அணுசக்தி யுத்தத்தின் விளிம்பிற்கு தள்ளும் விதமாக இந்த பொறுப்பற்ற ராணுவ முயற்சிகள் உள்ளன,” என்று வட கொரிய அதிகாரி கே சி என் ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தாட் ஏவுகணை என்றால் என்ன ?

பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயங்கும் நேரத்துக்கு முன்பு எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது.

200 கிலோமீட்டர் வரம்பில் 150கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும்.

வட கொரியாவின் சாத்தியாமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.

தாட் எவ்வாறு வேலை செய்கிறது?

எதிரி படை ஓப் ஏவுகணையை செலுத்தும்போது, தாட் ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை எதிர்கொண்டு இயங்கும் முன்பு மோதி அழிக்கிறது. தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top