(தினபூமி)
தெலுங்கானா போலீசார் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விமர்சனம் செய்திருப்பதற்கு அந்த மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கட்சியின் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங் தெலுங்கானா அரசு மீது புகார் கூறியுள்ளார். முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கும் வகையில் தெலுங்கானா மாநில போலீசார் போலி ஐஎஸ்ஐஎஸ். வெப்சைட்டை உருவாக்கியுள்ளனர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு அந்த மாநில அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு திக்விஜய் சிங் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது புகாரை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
தெலுங்கானா மாநில போலீசாரின் திறமையான செயல்பாட்டுக்காக பாராட்டுப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போலீசார் மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டை திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை திக்விஜய் நிரூபிக்க வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சர் நயானி நரசிம்ம ரெட்டி நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். திக்விஜய் சிங் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். முடியாவிட்டால் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது மாநில போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் ரெட்டி கூறினார். மாநில அரசும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கோபிநாத் ஏற்கனவே திக்விஜய் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.தீவிரவாதத்தில் சேரும்படி இளைஞர்களை போலீஸார் தூண்டிவிடுவார்களா ?என்றும் ரெட்டி கேள்வி எழுப்பினார். மத்தியப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங், இவ்வாறு பொறுப்பில்லாமல் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அமைச்சர் ரெட்டி மேலும் கூறினார்.