தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்.