மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சு பிழை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது உடனடி தேவை என்ற நிலையில் அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இந்த பிழை நேரிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது வரையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டாலும், அதனை ஏடிஎம்மில் எடுக்கும்போது பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
சமீபத்தில் வங்கி ஏடிஎம்களிலே போலி ரூபாய் நோட்டுகள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த ஒருவருக்கு மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து உள்ளது. மொரேனாவில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த ஒருவருக்கு மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. பின்னர், ஏமாற்றமடைந்த அவர் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை தடுத்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.