தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2015–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 20–ந்தேதி பிறப்பித்த உத்தரவில், மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்ட தலைநகரங்களிலும் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிராக வி.மேகநாதன் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சீமை கருவேல மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இந்த மரம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் இந்த மரம் அதிக அளவில் வளருகிறது. இந்த மரம், எரிபொருளாகவும், நிழல் தரும் மரமாகவும் திகழ்கிறது. மண்ணின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், காற்றின் வேகத்தை குறைப்பதற்கும் இந்த மரம் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில், இந்த மரத்தை விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தை வெட்டி விறகாக விற்பனை செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
கருவேலம் மரம் வளர்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரம், வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. உலகத்துக்கு ஒரு பசுமை போர்வையாக இருந்து வருகிறது.
மேலும் அந்த மனுவில் கூற்ப்பட்டிருப்பதாவது: கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு இருப்பது காடுகளை அழிப்பதற்கு சமமானது ஆகும்.
எனவே, தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும். அதை அகற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆய்வுசெய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். அதேநேரம், இந்த மனுவுக்கு வருகிற மே 11–ந்தேதிக்குள் ஐ.ஐ.டி. இயக்குனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை சீமை கருவேல மரங்களை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கக்கூடாது.
இந்த வழக்கு விசாரணையை வருகிற மே 11–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.