அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது.
தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.
தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
வடகொரியா இன்னும் கூடுதலாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற அச்சங்களுக்கிடையில், அமெரிக்கா சமீப நாட்களில் கொரிய தீபகற்பப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது.
வடகொரியா வாலாட்டக்கூடாது என்று எச்சரிக்குமாறு அதன் கூட்டாளி நாடான சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையில், வடகொரிய நிலவரம் தொடர்பாக, அமெரிக்க செனட்டர்களுக்கு வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பிற்பகுதியில் ரகசிய விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலை எப்படி மாறக்கூடிய வாய்ப்பு உண்டு, அமெரிக்கா எந்தெந்த வழிகளில் எல்லாம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் விளக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.