இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட தூதுக்குழு ஒன்றும் வந்துள்ளது.
டெல்லி தாஜ்பேலஸ் ஓட்டலில் அவரை நேற்று காலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து ரனில் விக்ரம சிங்கேயும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் இல்லத்துக்கு சென்றார். அங்கு வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை அவர் வரவேற்றார். இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள், பிராந்திய விஷயங்கள் குறித்து விரிவாகபேசப்பட்டன.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், படகுகளை கைப்பற்றிச்செல்வதும் நீடித்துவருவது பற்றி ரனில் விக்ரம சிங்கேயிடம் மோடி எடுத்துக்கூறியதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்; மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் ரனில் விக்ரம சிங்கேயிடம் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து பேசியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், ‘‘மக்களின் நலன்களுக்காக, இந்திய–இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே டுவிட்டரில், ‘‘வலுவான பொருளாதார ஒத்துழைப்புக்காக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன’’ என கூறி உள்ளார்.
ரனில் விக்ரம சிங்கே இன்று தனிப்பட்ட பயணமாக ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூருக்கு செல்கிறார் என டெல்லி தகவல்கள் கூறுகின்றன.