ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு மாத காலத்திற்கு இணையதள தொடர்பு வசதி நிறுத்திவைக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பிடிக்கும் முயற்சியிலோ அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் முயற்சியிலோ பாதுகாப்பு படையினர் ஈடுபடும்போது காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள இளைஞர்கள் பலர் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு பாதுகாப்பு படையினர் மீது கல்வீ்சி தாக்குகின்றனர். மேலும் சமீபத்தில் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது இளைஞர்கள் வன்முறை, தீவைப்பு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடைத்தேர்தலில் வெறும் 7.13 சதவீத வாக்குகளே பதிவாகின. இதற்கு முன்பு இந்த மாதிரி மோசமான வாக்குப்பதிவு இருந்ததில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முக்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்து விளக்கினார்.
அதன் அடிப்படையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகவை எடுக்க ஜம்மு-காஷ்மீர் அரசு தொடங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணையதள தொடர்பு வசதி வரும் ஒரு மாத காலத்திற்கோ அல்லது மறு உத்தரவு வரும்வரை நிறுத்தப்படும் என்று மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் காஷ்மீர் பள்ளதாக்கில் இணையதள வசதியை துண்டிக்க மாநில உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அனைத்து இணையதள வசதிகளும் துண்டிக்கப்படுமா? அல்லது செல்போன்களுக்கு மட்டும் இந்த துண்டிப்பா என்பது குறித்து விளக்கப்படவில்லை. பாதுகாப்பு படையினர்களுக்கு எதிராக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் செல்போன்களுக்கு இந்த வசதி கடந்த 17-ம் தேதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி: தினபூமி)