அமெரிக்க தற்காப்புவாதக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், உலகம் முழுதும் உள்ள திறமைகளின் பங்களிப்பின்றி ஆப்பிள், ஐபிஎம் நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூயார்க்கில் சொற்பொழிவாற்றிய பிறகு உர்ஜித் படேல் கூறியதாவது:
உலகின் மிகத்திறமை வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் உலகெங்கிலும் வந்து பங்களிப்பு செய்த திறமைகள் இன்றி உயர்ந்திருக்க முடியுமா?
உலகத்திறமைகளின் பங்களிப்பு இல்லாமல் ஆப்பிள் எங்கிருந்திருக்கும்? சிஸ்கோ எங்கு இருந்திருக்கும்? ஐபிஎம் எங்கு இருந்திருக்கும்? இதற்குத் தடை ஏற்படும் விதமாக கொள்கைகள் வகுக்கப்பட்டால், தற்காப்புவாதக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தால் ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் காரணிகளே அதிகம் பாதிக்கப்படும்.
வாணிப உபகரணங்களான சுங்கத்தீர்வைகள், எல்லை வரி உள்ளிட்டவைகள் மூலம் தற்காப்புவாதத்தை திறம்பட செயல்படுத்தி விட முடியாது. மாறாக வளர்ச்சிக்கு குந்தகமே விளைவிக்கும், என்றார்.
ஜிஎஸ்டி வரி குறித்து..
“சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் மிகப்பெரிய உதாரணமாகும். இதில் சமரசம் செய்து கொண்டிருந்தால் ஜி.எஸ்.டி. என்பது அமைப்பு ரீதியாக வரி விதிப்பு நடைமுறைகளை பலவீனப்படுத்தியிருக்கும்” என்றார் உர்ஜித் படேல்.
(நன்றி : தி இந்து தமிழ்)