இலங்கையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொழிற்சங்க உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது பிரதமர் வழங்கிய எழுத்து மூலமான உறுதிமொழியை அடுத்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தாங்கள் தீர்மானித்ததாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் டி.ஜே.ராஜகருணா, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிரதமர் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது திருகோணமலையில் அமைந்துள்ள எரிபொருள் களஞ்சியங்களை இந்தியாவிற்கு ஒப்படைப்பது சம்பந்தமாக எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாதென்று பிரதமர் எழுத்து மூலமான உறுதிமொழியொன்றை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன.
இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.