(நன்றி: பி.பி.சி. தமிழ்)
சண்டிகர் மாவட்ட நிர்வாக வலைதளத்தில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான தரவு மீறல்கள் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
யூஐடி எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் சம்பந்தப்பட்ட நபரின் உணவுப்பொருள் வழங்கல் அட்டை தகவல்களும் வலைதளத்தில் காணப்பட்டது.
பிரத்யேக தகவல்கள் கசிந்தது வெளிச்சத்திற்கு வந்தவுடன், இந்த வலைத்தள பக்கம் நீக்கப்பட்டது.
முன்பு, இது போன்ற தரவுகள் ஜார்கண்ட் மாநில வலைத்தளத்திலும் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக பல்வேறு புகார்களும், விமர்சங்களும் எழுந்துள்ளன.
வெவ்வேறு அரசு திட்டங்களுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும் லட்சிய திட்டத்தை தற்போது இந்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆதார் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போதைய நரேந்திர மோதி அரசில், அரசு சேவைகள் முதல் டிஜிட்டல் விண்ணப்பங்கள் வரை பல்வேறு திட்டங்களில் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டையை அரசு எவ்வாறு கட்டாயமாக்குகிறது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வினவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பதை தெரிவித்த உச்ச நீதிமன்றம் , ”ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக மாற்று சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக நாங்கள் உத்தரவிட்டுள்ள போது, ஆதார் அடையாள அட்டையை நீங்கள் எவ்வாறு கட்டாயமாக்கலாம்?” என்று இந்திய அரசை வினவியது.
ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள், இந்த அட்டை கட்டாயமாக்கப்படுவது, ஆதார் அடையாள அட்டையில் இருந்த தகவல்களை திருடுவது மற்றும் அது தவறாக பயன்படுத்தபடுவது ஆகிய ஆபத்துக்களை அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.