பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் மல்லையாவை லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது. பின்னர், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமானச் சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இந்திய வங்கிகளிடம் இருந்து பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்த தவறிய குற்றச்சாட்டும் மல்லையாவின் மீது இருந்தது. நீதிமன்றங்களில் இவை தொடர்பான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டன் சென்றுவிட்டார்.
சிக்கலான நடைமுறைகள்
குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு காரணம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான, அயல்நாட்டிடம் ஒருவரை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் சிக்கலான செயல்முறைகள் தான்.
சர்வதேச ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் என பிரிட்டிஷ் அரசு, உலகின் சுமார் 100 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், இரண்டாவது பிரிவின் டைப் பி வகையில் இந்தியா வருகிறது.
பிரிட்டனில் இருக்கும் ஒருவரை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகள் அடங்கிய முழு தகவல்களும் பிரிட்டிஷ் அரசின் வலைதளத்தில் உள்ளது. இந்தியா இடம்பெற்றிருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் கோரிக்கைகளை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும், நீதிமன்றங்களும் பரிசீலித்து முடிவெடுக்கும்.