இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இனயத்தில் வர்த்தக துறைமுகத்துக்கு பதிலாக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இனயம் துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி இனயம் சரக்கு பெட்டக மாற்று துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் கார்மல் பள்ளி மைதானத்தில் 5-ந் தேதி (நேற்று) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அறிவித்தார்.
அதன்படி நாகர்கோவிலில் ராமன்புதூர் பகுதியில் உள்ள கார்மல் பள்ளி மைதானத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் வரவேற்றார். ஆயர்கள் நீதிநாதன் (செங்கல்பட்டு), லாரன்ஸ் பயஸ் (தர்மபுரி), அந்தோணி பாப்புசாமி (மதுரை), தாமஸ் பால்சாமி (திண்டுக்கல்), ஜார்ஜ் ஆன்டனிசாமி (சென்னை), இவான் அன்புரோஸ் (தூத்துக்குடி), சூசை மாணிக்கம் (சிவகங்கை), ஜூடு பால்ராஜ் (பாளையங்கோட்டை), சூசைபாக்கியம் (திருவனந்தபுரம்)
மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நெல்லை மாவட்டம் கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் சுல்பீகர் அலி, குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.