ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட விக்ரம் பத்ரா, தனது பணியை நேற்று தொடங்கினார். பணப் பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் ரோந்து செல்கின்றனர்.
பாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ கத்தின் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. பல பகுதிகளில் தேர்தல் நடந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்தான் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை களை எடுத்து வருகிறது. காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் ஆர்.கே. நகரில் 5-க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். மேலும் நுண் பார்வையாளர்கள், துணை ராணு வத்தினர் ரோந்து, சிசிடிவி கண் காணிப்பு என ஆர்.கே.நகர் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில், தொப்பி சின்னத் தில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகர னுக்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணம் விநியோகிக்கப்பட்ட தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தன. அதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.
இதே புகாரை திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் அளித்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் முழு கவனத்தையும் தேர்தல் ஆணையம் திருப்பியுள்ளது.