ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

 

 

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அவற்றுள், வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி அளித்த தீர்ப்பில்,  “பான்” என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆதார் அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் ஜே. செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, முடிவில்  ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அவ்வுத்தரவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா; இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைத்து பதில் தருமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இந்த அமர்வு, புதனன்று (இன்று) விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இவ்விவகாரத்தில் இதன் முன்பு நடைபெற்ற கரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளும் ஆராயப்படும். கரக்சிங் வழக்கில் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1960-களிலும், எம்.பி. சர்மா வழக்கில் 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1950-ம் ஆண்டிலும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இவ்விரு வழக்குகளிலுமே அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு பிந்தைய பல தீர்ப்புகள், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என கூறி உள்ளன.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, “அந்தரங்க உரிமைக்கென்று பொதுவான சட்டம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் குடிமக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அந்தரங்க உரிமை, இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top